தீவிரம் அடைந்த ‘மாண்டஸ்’ புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:- வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும். தீவிரப்புயலாக உள்ள மாண்டஸ் சென்னையில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
காரைக்காலில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தீவிர புயலாக உள்ள மாண்டஸ் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும். புயல் இன்று இரவுக்கும் நாளை அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
‘மாண்டஸ்’ புயல் சின்னம் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாண்டஸ் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே கனமழை பொழியும் என்பதால் செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
7 விமானங்கள் ரத்து
வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 7 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா, மும்பை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா நகரங்களில் இருந்து வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்றின் வேகம், மழை அளவை பொறுத்து மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை விமான நிலையத்தில், மாண்டஸ் புயலை சமாளிக்கும் விதத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.







