காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கோவில்பட்டியை சேர்ந்தவருக்கு ரூ.1000 அபராதம் விதித்த சென்னை போலீஸ்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் தேன்ராஜா (வயது 50). இவர் அரசு உதவி பெறும் மனநல காப்பகம் நடத்தி வருகிறார்.
இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்வதற்கு ஏதுவாக ஒரு கார் பயன்படுத்தி வருகிறார். கடந்த 2-ந் தேதி இரவு 8.57 மணிக்கு அவரது செல்போனுக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்துள்ளத
அதில், இவருடைய கார் எண் பதிவிட்டு ஹெல்மெட் அணியவில்லை எனவும், அதற்காக ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாகவும் வந்துள்ளது. மேலும் அதில் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்செல்லும் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.
கோவில்பட்டியில் இருக்கும் காருக்கு சென்னையில் சென்றதாக அபராதம் விதித்தது மட்டுமின்றி, அதில் மோட்டார் சைக்கிள் புகைப்படம் இடம் பெற்றுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருகிறது.
இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரின் உரிமையாளர் தேன்ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.







