தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து சட்டம்-ஒழுங்கு நிலை சீராக உள்ளது; டிஜிபி சொல்கிறார்
தமிழகத்தில் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் பொறுப்பேற்ற பிறகு கோவில் திருவிழாக்கள், தேவர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆகியவை அமைதியாக நடந்து முடிந்தன. கடந்த 5, 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன.

குடும்பத் தகராறு, நிலம், பணப் பிரச்சினை, கள்ளத்தொடர்பு, தெருச்சண்டை போன்ற தனிப்பட்ட காரணங்களாலேயே 90 சதவீதக் கொலைகள் நடந்துள்ளன. ரவுடியிசத்தால் ஒரு சதவீத கொலைகளே நடந்துள்ளன
ஜனவரி முதல் நவம்பர் 15 வரையிலான புள்ளிவிவரப்படி, 2022-ம் ஆண்டில் 1,484, 2023- 1,469, 2024- 1,383, 2025-1,346, நடப்பு 2026-ல் 1,306 கொலைகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டை விட இது 40 குறைவாகும். அக்டோபர் வரை கொலை வழக்குகளில் தொடர்புடைய 3,229 குற்றவாளிகளில் 3,077 பேர் (95 சதவீதம்) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பெரிய ரவுடிகள் என்று யாரும் இல்லை. போதைப்பொருள் ஒழிப்பில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளின் வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
செஞ்சியில் சிறுமி காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் நேரடியாகக் கண்காணித்து சரியான பாதையில் விசாரித்து வருகின்றனர். ‘லாக்-அப்’ மரணங்கள் நடக்கக்கூடாது என்பதே காவல்துறையின் நிலைப்பாடு. மதுரை சம்பவத்திலும் சி.பி.சி.ஐ.டி. மற்றும் நீதித்துறை விசார ணைகள் தனியாக நடக்கின்றன.

ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் 6 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி, அந்த பகுதியில்தான் வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். போலீஸ் நிலையங்களில் புகார் மனு பெறுவது, வழக்கு விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுவதால், குற்றங்கள் குறைந்து சட்டம்-ஒழுங்கு நிலை சீராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.







