காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது; மத்திய மந்திரியிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணைத் திட்டம், காவிரி நடுவர் மன்றத்தின் 5.02.2007 தேதியிட்ட இறுதி தீர்ப்புக்கும், உச்சநீதிமன்றத்தின் 16.2.2018 தேதியிட்ட தீர்ப்புக்கும் முரணானது. மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 27.5.2026 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், மேகதாது திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர், இந்திய பிரதமர் மோடியிடம் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் வலியுறுத்தியுள்ளார்.

19.6.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் 2025 டிசம்பரில் வெளியிட்ட காவிரி நீர்ப்பாசன திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் 03.08.2026 அன்று ரிட் மனுவையும் தாக்கல் செய்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை அல்லது நீரை திசைதிருப்பும் திட்டங்களை செயல்படுத்த, காவிரி படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிய சட்டப்பூர்வ ஒப்புதலும் அவசியம் என்பதை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கர்நாடக அரசு மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக முன்னெடுத்து செல்ல முயற்சித்து வருவது கவலைக்குரியதாகும்.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் . ஆனந்த் , பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ,பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோருடன் இணைந்து டெல்லியில் மத்திய ஜல் சக்தித்துறை மந்திரி . சி.ஆர். பாட்டீலை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்.
அக்கடிதத்தில், கூறி இருப்பதாவதுள்-
*கூட்டாட்சி தத்துவத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகமும், மத்திய நீர் ஆணையமும் (CWC) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது.

.*காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளில் புதிய நீர்த்தேக்கங்கள் அமைத்தல் அல்லது நீரைத் திசைதிருப்புதல் உள்ளிட்ட எந்தவொரு புதிய திட்டத்தையும், காவிரி படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பூர்வ ஒப்புதல் மற்றும் இசைவு இல்லாமல் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
*மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நடைமுறைகளை பாதுகாக்கும் வகையில், உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ள அமைச்சர் ஆனந்த் , இக்கோரிக்கைகள் தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சர் மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, விரிவான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.,







