54 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மேலாண்மைக்குழு குறித்த பயிற்சி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட 54 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்குப் பள்ளி மேலாண்மைக்குழுவின் செயல்பாடுகள் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இப்பயிற்சியை உதவித்திட்ட அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார்.

பள்ளி மேலாண்மைக்குழுவின் முக்கியத்துவம், நோக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் அதன் மூலம் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விளக்கப்பட்டது.
பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைப் பிற அரசுத் துறைகள் மூலம் செயல்படுத்துவது, பள்ளிகளின் அவசரத் தேவைகளைத் தீர்மானங்களாக முன்வைப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
‘பள்ளி மேலாண்மைக்குழுவில் தலைமையாசிரியர்களின் பொறுப்புகளும் கடமைகளும்’ என்ற தலைப்பில் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. கூட்டத் தீர்மானங்களைப் பெற்றோர் செயலியில் பதிவு செய்வது, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் புகைப்படங்களுடன் பதிவேற்றுவது உள்ளிட்ட தொழில்நுட்ப வழிமுறைகளும் பயிற்றுவிக்கப்பட்டன.
மாநில கருத்தாளர்கள் சிவரஞ்சனி, கோகிலா மற்றும் மாவட்ட கருத்தாளர் முத்துமாரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நன்றி கூறினார்.







