• November 20, 2026

மு.க.ஸ்டாலினை தோற்கடித்த கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானார்

 மு.க.ஸ்டாலினை தோற்கடித்த கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானார்

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

 தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே இருந்தார்.அவ்வப்போது, வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கைகளை வெளியிட்டுவந்தது.

70 நாட்களாக தொடர் சிகிச்சையில் வி.எஸ்.பாபு இருந்து வந்தாலும், கடந்த 2 வாரங்களாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகத் தொடங்கின. அவரது உடல்நிலை 

குறித்து அறிக்கை வெளியிடக்கோரி சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவும் இருந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் வி.எஸ்.பாபு இன்று பிற்பகல் 2.24 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 75.

இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.

பாபு அவர்கள், நீண்டகால சுவாசக் கோளாறு காரணமாக 2026 செப்டம்பர் 9ம் தேதி எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்.பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.விரிவான மருத்துவ மேலாண்மை மற்றும் எங்களின் பல்துறை மருத்துவக் குழுவின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, 2026 நவம்பர் 19ம் தேதி(இன்று )மதியம் 2:24 மணிக்கு அவர் காலமானார்.

இந்த இக்கட்டான நேரத்தில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, எம்.ஜி.எம் ஹெல்த் கேர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

 இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில்  தி.மு.க.வில் இருந்த வி.எஸ்.பாபு 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதன்பிறகு, கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக, தி.மு.க.வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

அ.தி.மு.க.விலும்கண்டுகொள்ளப்படாததால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி த.வெ.க.வில் இணைந்தார்.

2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. சார்பில் கொளத்தூர் தொகுதியில் களம் இறக்கப்பட்ட வி.எஸ்.பாபு, யாரும் எதிர்பாராத விதமாக 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை தோல்வியடையச் செய்தார்.

 முதல்-அமைச்சராக இருந்தவரையே தோல்வியடையச் செய்ததால், த.வெ.க. அமைச்சரவையில் வி.எஸ்.பாபுவுக்கு இடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அமைச்சர் பதவி எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

70 நாட்கள் தொடர் சிகிச்சை பலன் அளிக்காமல் தற்போது அவர் மரணம் அடைந்திருக்கிறார். இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்து இருக்கிறது. ஏற்கனவே, திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்போது, கொளத்தூர் தொகுதிக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *