கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியுடன் விசாரித்த இன்ஸ்பெக்டர்: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு ராஜகோபால் நகரில் நரிக்குறவர் காலனி உள்ளது. அங்கு தீபாவளி அன்று சிலர் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பாக மோதிக் கொண்டனர். இதில், அந்த பகுதியைச் சேர்ந்த மூக்கையா, கணேசன், சரவணன், மாரி ஆகியோர் காயமடைந்து கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த பகுதியைச் சேர்ந்த மாவீரன் (வயது 41), ரவி (39) ஆகிய 2 பேரை கைது செய்தனர். குமார், ரஞ்சித் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வானமாமலை அங்கு விசாரணை நடத்த சென்றார். அப்போது அவர். அங்குள்ள மக்கள் சிலரை தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் விசாரணை நடத்தியதுடன் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டபோது. இருதரப்புக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு 4 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர், இருதரப்புக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு விடக்கூடாது என அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர்களின் பாதுகாப்பு தான் முக்கியமாக இருந்தது. மற்றபடி யாரும் மிரட்டப்படவில்லை என்றனர்.







