மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை; வெற்றி யாருக்கு?
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் (அக்.6) இடைத்தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு பதவி ஏற்ற 4 மாதத்தில், இந்த இடைத்தேர்தல் வந்ததால், புதிய அரசை எடைபோடும் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகள் த.வெ.க.வுக்கு கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தாலும், இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகின்றன.
இதனால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என்பது த.வெ.க. அரசுக்கு முக்கிய தேவையாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், அது த.வெ.க. அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுவதுடன், அது ஆட்சியை கலைக்கும் நிலைக்கே கொண்டு செல்லும் அபாயமும் உள்ளது.

இந்த இக்கட்டான நிலையில் தான் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஆரம்பத்தில் ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதுபோல் தெரிந்தாலும் தேர்தல் நெருங்க.. நெருங்க.. சற்று மங்கத் தொடங்கியது. யாருக்கு வெற்றி கிட்டும்? என்பது மதில் மேல் பூனையாக அமர்ந்திருக்கும் நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
5 முனைப்போட்டி நிலவிய நிலையில், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (த.வெ.க.), பரந்தாமன் (தி.மு.க.), கணிதா சம்பத் (அ.தி.மு.க.), சுகந்தி (மா.கம்யூ.), ஜானகிராமன் (நாம் தமிழர்) ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இதேபோல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா (த.வெ.க.), சுகன்யா (தி.மு.க.), பானுமதி (அ.தி.மு.க.), லட்சுமணன் (இ.கம்யூ.), கார்த்திகா (நாம் தமிழர்) ஆகியோர் போட்டியிட்டனர்.
மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் ஓட்டுபோட தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 1,04,926 ஆண் வாக்காளர்களும், 1,08,797 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்காளர்களும் அடங்குவார்கள்.

இதேபோல், தாராபுரம் தொகுதியில் மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் ஓட்டுபோட தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 1,07,285 ஆண் வாக்காளர்களும், 1,16,013 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலின வாக்காளர்களும் அடங்குவார்கள்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலின்போது மதுராந்தகம் தொகுதியில் 93.22 சதவீத வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 89.89 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
ஆனால், இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 85.99 சதவீத வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 80.31 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன. அதாவது, மதுராந்தகம் தொகுதியில் 7.23 சதவீதம் அளவுக்கும், தாராபுரம் தொகுதியில் 9.58 சதவீதம் அளவுக்கும் வாக்குப்பதிவு குறைந்து போய் இருந்தது.
இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்துபோனது, அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோர் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள் சென்னையில் படித்து கொண்டிருப்பதால், ஓட்டுபோட ஊருக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
சட்டசபை பொதுத் தேர்தலின்போது இளைஞர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்ததால், த.வெ.க. வெற்றி பெற்றது. ஆனால், இடைத்தேர்தலில் அது குறைந்து போய் இருப்பதால், முதல்-அமைச்சர் விஜய் உள்பட த.வெ.க.வினர் அச்சத்தில் உள்ளனர்.
எது எப்படி என்றாலும், நாளை (அக்.9) காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அப்போது இருந்தே முன்னணி நிலவரங்கள் தெரியவரும்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் த.வெ.க. – அ.தி.மு.க. இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்த இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றிருந்தது. அப்போது, அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற அதே வேட்பாளர்கள், தற்போது த.வெ.க. சார்பில் களம் இறங்கி இருப்பதால், வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு நிலவுகிறது..







