தஞ்சையில் விசாரணைக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி நிர்வாகி ஒருவர் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை அவரின் வீட்டிற்கே சென்று போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

காலை 11 மணியளவில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த போலீசார், அங்கிருந்து தஞ்சாவூர் அழைத்து சென்றனர். . இதனிடையே உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்துவிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.
பிற்பகல் 2 மணியளவில் விழுப்புரம் அருகே ஒலப்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் உணவு சாப்பிட்டார். தொடர்ந்து 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை போலீசார் வாகனம் கடந்து சென்றது. 8 மணி நேரத்திற்கும் அதிகமாக உதயநிதி ஸ்டாலின் வேனில் பயணம் செய்தார்.பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு பிளாஸ்க்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.கணேசன் தேநீர் வழங்கினர்.
இந்தநிலையில், உதயநிதி விசாரணைக்காக தஞ்சை தெற்கு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.
உதயநிதி மீது தஞ்சை கிழக்கு சரக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. காவல் நிலைய பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் அருகே சென்றபோது, திடீரென தஞ்சாவூர் செல்லாமல், தஞ்சை எல்லையில் உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முதலில் இங்கு வைத்து விசாரணை நடத்தக்கூடாது என்று உதயநிதி கூறினார். பின்னர், திமுக தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் இவரிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் இரவு 8.15 மணிக்கு காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.
அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடினர். அவர்களுக்கு கையசைத்த படி உதயநிதி ஸ்டாலின் திருச்சி நோக்கி புறப்பட்டார். திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை விரைகிறார்







