தூத்துக்குடியில் மறியல் : கீதா ஜீவன் உள்பட நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதையடுத்து, அதைக் கண்டித்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்ததாவது: “சட்டமன்றத்தில் தி.மு.க.வினரின் கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணறும் த.வெ.க. அரசு, பழிவாங்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
த.வெ.க. அரசு தொடர்ந்து ஜனநாயக வழியிலான போராட்டங்களை முடக்கி, மக்களின் குரல்வளையை நெரித்து வருகிறது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது.” என்றார்.
முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கைது நடவடிக்கைக்கு எதிராகவும், காவல்துறையைக் கண்டித்தும் தீவிர முழக்கங்களை எழுப்பினர். இந்தத் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

இதைத் தொடர்ந்து கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட திமுக வினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்







