கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
Oplus_16908288
கடந்த 2019-ஆம் ஆண்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிள்புரம் பகுதியில், முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மோகன் (32) என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில், போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி முருகன் மகன் செலிஸ்டின் குமார் (38), அவரது சகோதரர் மனோ என்ற மனோகுமார் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜ் என்ற நாகராஜ் (37) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் (ADJ-I) நீதிபதி தாண்டவம் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனோ என்ற மனோகுமார் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார். அதேவேளையில், செலிஸ்டின் குமார் மற்றும் ராஜ் என்ற நாகராஜ் ஆகியோர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.







