தவெகவில் இணையுமாறு மிரட்டியதாக புகார்: திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் போலீஸ் விசாரணை
தமிழக வெற்றிக் கழகத்தில் இணையச் சொல்லித் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறிய புகாரின் பேரில், திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தன்னைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையச் சொல்லி மிரட்டியதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாகத் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு அதிகாரப்பூர்வச் சம்மன் அனுப்பியிருந்தனர். சம்மனை ஏற்றுத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் வந்து ஆஜரானார். அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி முன்னிலையில் தீவிர விசாரணை நடைபெற்றது.

சில மணி நேர விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அலுவலக வளாகத்தில் காத்திருந்த பத்திரிகையாளர்களை அனிதா ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேட்டி அளித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “ஏற்கனவே வெளியில் உங்களிடம் என்ன கூறினேனோ, அதைத்தான் உள்ளே போலீஸ் விசாரணையிலும் தெரிவித்துள்ளேன். உண்மையான திமுக தொண்டனை எவராலும் மிரட்ட இயலாது” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.







