அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள்;கரூர் கூட்டத்தில் விஜய் பேச்சு
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் கலந்துகொண்டு, பேசுகையில் கூறியதாவது:-
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எத்தனை உயரங்களுக்குச் சென்றாலும் சில காயங்களையும் வலிகளையும் மறக்க முடியாது. எனக்கு அனைத்தையும் விட அதிக வலியையும் காயத்தையும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான். நெடுஞ்சாலையில் இருந்து எங்களைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததே போலீஸ்தான்.

கரூர் சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்தனர்.நமக்கு இத்தனை வலிகளைக் கொடுத்தவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால் அதுமட்டும் போதாது, அவர்கள் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடியைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நான் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதி அல்ல. எனக்குப் பணத்தை விட ஜனம்தான் முக்கியம்.
சட்டப்பேரவையில் ‘பார்ட்டி பண்ட்’ என்று சொன்னவுடனேயே, யார் எந்தக் கட்சி என்று பெயர் குறிப்பிடாமலேயே சிலர் ஓடிவிட்டனர். ‘என் அப்பா பீரோவுக்குள் இல்லை’ என்று இவர்களாகவே சொல்லிக் கொள்கிறார்கள். குற்றம் உள்ள நெஞ்சம்தான் குறுகுறுக்கும். கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்.
பேசிப் பேசிப் பிரச்சினையை வளர்த்து, பிறர் மீது பழியைப் போட்டு மக்களைத் தெருவில் விடும் அரசியல் எனக்குத் தேவையில்லை. ‘டாக் லெஸ், வொர்க் மோர்’ என்பதுதான் நமது கொள்கை.
கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்; இன்னொருவர் வெளிநாட்டில் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றுள்ளார்.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் லஞ்சம், ஊழல் இல்லை என்றும், மக்களுக்கு உரிய மரியாதை கிடைத்து வேலைகள் விரைவாக நடப்பதாகவும் மக்கள் கூறுவதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது”

தீயசக்தி இப்போது யார் கதவைத் தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது மக்களுக்குத் தெரியும். தீய சக்தியும், தீர்ந்துபோன சக்தியும் வேறு வேறு கிடையாது; இருவரும் கூட்டுக் களவாணிகள். தவெக ஆட்சி அமைந்தது முதல் சோபா ஆட்சி, வாஷிங் மெஷின் ஆட்சி என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள். உண்மையில் அரசியல் வியாபாரம் செய்வதற்கான வெண்டிங் மெஷினே திமுகதான்.
பொதுமக்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் தர முடியாது என மறுத்துவிடுங்கள், உங்களுக்குத் துணையாக நான் இருக்கிறேன். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டுத் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது.
நான் கரூருக்கு வரக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப் பார்த்தார்கள்; இப்போது இருப்பது திமுக ஆட்சி இல்லை. நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தையும் சதியையும் எதிர்காலத் தலைமுறைக்குத் தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவு சின்னம் அமைக்கப்படும். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தீய சக்தியான திமுகவை மக்கள் வெளுத்து வாங்க வேண்டும்”
இவ்வாறு விஜய் பெசினார்.







