இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது; வைகோ அறிவிப்பு
தமிழக சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 7 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.

இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்ற பலத்த எதிர்பார்ப்பு மற்றும் அரசியல் உத்திகள் தமிழக அரசியல் கட்சிகளிடையே தீவிரமாக எழுந்துள்ளன.
இந்நிலையில், திருநெல்வேலியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நடைபெற உள்ள 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மதிமுக நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை. மாறாக, இத்தேர்தலில் தவெக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக மதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் களத்தில் முழு மூச்சாக நின்று உழைப்பார்கள்” என்று உறுதி அளித்தார்.

மேலும், அண்மையில் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தவெக எம்எல்ஏக்களுக்குரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “இந்த ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரமானது, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத ஒரு மிகப்பெரிய அரசியல் மோசடியாகும்” என்று குற்றம் சாட்டினார்.







