தே.மு.தி.க.வுக்கு பா.ஜ.க. அளித்த வாக்குறுதி
தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இணைய போகிறது என்பதை யாராலும் யூகிக்க முடியவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. என இரு கூட்டணியிலும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தையை நடத்தி கொண்டு மதில் மேல் பூனையாக இருந்த தே.மு.தி.க., நிறைவாக தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் ஆகியவற்றுக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டது.
அதேநேரத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க., கூட்டணியை மேலும் பலப்படுத்தும் முயற்சியாக மீண்டும் தே.மு.தி.க.வுடன் சில சலுகைகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டது.

இந்த நேரத்தில், தே.மு.தி.க.வுக்குள்ளும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலர் போட்டியிட வாய்ப்பு கேட்டு போர்க்கொடி தூக்கியதால், தி.மு.க. கூட்டணியில் உறுதியளிக்கப்பட்ட 6 தொகுதிகள் போதாது என்ற நிலை ஏற்பட்டது.
இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வந்த பா.ஜ.க.விடம் தே.மு.தி.க.வால் மறுப்பு சொல்ல முடியவில்லை. பேச்சுவார்த்தையின்போது பா.ஜ.க, 8 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட், ஒரு மத்திய இணை மந்திரி பதவி ஆகியவை தருவதாக வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது.
இதைத்தான் ஆரம்பத்திலேயே அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. எதிர்பார்த்ததாம். எதிர்பார்ப்பு பூர்த்தியாகவே தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் உடனடியாக கூட்டணிக்கு சம்மதித்து விட்டதாக தெரிகிறது.
இதனால், தி.மு.க. தலைமை தே.மு.தி.க. மீது அதிருப்தியில் உள்ளதாம்., திடீரென தி.மு.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. மாற இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.







