கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்; தேமுதிக மாநாட்டில் தீர்மானம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு கடலூரில் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் மிக முக்கியமான தேர்தல். 2026ஆம் ஆண்டு அமையவிருக்கும் ஆட்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ந்து, தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழும் வகையிலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு, சமூக நீதி மற்றும் பொருளாதார முன்னேற்றம் அடைய தமிழக மக்களின் நலன், மற்றும் எதிர்கால தலைமுறையின் நம்பிக்கைகளை நிறைவேற்றும் ஆட்சியாக அமைய வேண்டும்

*தமிழ்நாட்டில் தற்போது சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், சட்டம், ஒழுங்கை சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றிலும் தடுக்க, குற்றவாளிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். டாஸ்மாக் மதுபான விற்பனையை முறைப்படுத்தியும், கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும். போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் அதற்கு துணைபுரிவோருக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்
*தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து, அவர்களின் பணிகளை நிரந்தரப்படுத்தி, சம ஊதியம் மற்றும் நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக வழங்கி, எதிர்காலத்தில் எந்தவிதப் போராட்டங்களுக்கும் இடமளிக்காத வகையில் நிரந்தரமான தீர்வுகளை அரசு உருவாக்க வேண்டும்
*சாதி, மத அடிப்படையில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மற்றும் செயல்கள் சனாதனத்திற்கும், சமூக அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இத்தகைய கருத்துக்களை கடுமையாகத் தடுக்கவும், மதரீதியான மோதல்களை உருவாக்குவோர் மீது காவல்துறை பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
*கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.

*தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து, விவசாயிகளுக்கு நிரந்தரமான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் வரப்போகும் அரசு இருக்க வேண்டும். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, விவசாயத்தை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு கொள்முதல் செய்யப்படும் கரும்பிற்கு உரிய நியாயமான விலையை தமிழக அரசே நிர்ணயித்து, கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல் மணிகளை பாதுகாக்க, போதிய கிடங்குகளை அமைக்க வேண்டும்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களின் சமூக சேவை, அரசியல் பங்களிப்பு, திரைத்துறையில் அவருடைய சாதனைகள் மற்றும் தமிழக மக்களுக்காக அவர் ஆற்றிய மகத்தான பணிகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசிற்கு ஏற்கனவே தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வழங்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை வழங்க வேண்டும்

*புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்துக்கு “மணிமண்டபம்” அமைத்துத் தர வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், அந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,







