கோவில்பட்டி ஜி.வி. என். கல்லூரி நிறுவனர் தின விழா
கோவில்பட்டி ஜி. வி. என். கல்லூரியில் கல்லூரி நிறுவனர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
சொல் விளையாட்டு, நொண்டி, கிட்டிப்புள் போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், தலைவர் அல்லது அறிஞர் போல் வேடமேற்றல் போன்ற போட்டிகளும் மற்றும் கணித தொடர் ஓட்டம், அறிவியல் சார்ந்த படைப்புப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற இளைஞர் பாராளுமன்றம் சிறப்பு நிகழ்வாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் வேதியியல் துறைத்தலைவர் பா.உமாதேவி வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் ப.மகேந்திரன் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் அ.பாண்டியராணி வாழ்த்துரை வழங்கினார்.
சுயநிதிப் பாடப்பிரிவுகள் இயக்குநர் பா.மகேஷ் குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இ. ராமநாதபுரம் பொன்னுஸ் இயற்கை வேளாண்மை நிறுவனத்தின் நிறுவனர் பி. பொன்னுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

விழாவில் அதிக புள்ளிகளை பெற்ற கழுகுமலை செயின்ட் லூயிசா பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய வேதியியல் துறைப் பேராசிரியர் வெ. கோமதி சங்கரேஸ்வரிக்கு சிறப்பு செய்யப்பட்டது. முடிவில் இயற்பியல் துறைத்தலைவி பெ.சித்ரலேகா நன்றி கூறினார்.







