கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலி

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் இரவு 11.45 மணிக்கு அருட்தந்தையர்கள் பங்களாவில் இருந்து அருட்தந்தையர்களை கிறிஸ்தவ மக்கள் பவனியாக அழைத்து வந்தனர்.
பின்னர் கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி கொண்டாடப்பட்டது. திருப்பலியில் புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்திரு அருள்ராஜ் அடிகளார், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளார், சேசு சபை அருட்தந்தை மணிவளன், மதுரை ஓ.சி.டி. சபை இன்னாசி அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.

தொடர்ந்து கிறிஸ்தவ மக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இதேபோல் புனித சூசையப்பர் ஆலயத்தின் கிளைப் பங்கான கசவன்குன்று, இலுப்பையூரணி, பூசாரிபட்டி, லிங்கம்பட்டியிலும் சிறப்பு திருப்பலி நடந்தது. காலை 8 மணிக்கு புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
காமநாயக்கன்பட்டி
காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா திருத்தல பேராலயத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பு பெருவிழா இரவு 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரை நடந்தது.
திருப்பலி தொடக்கத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து, குழந்தை இயேசுவுக்கு அர்ப்பணம் செய்தனர்.

சேசு சபையை சேர்ந்த ஆரோக்கியசாமி தலைமை ஏற்று சிறப்பு திருப்பலியை நடத்தினார். அருட்தந்தை வியாகப்பராஜ் கிறிஸ்து பிறப்பு சிறப்பு செய்தியை வழங்கினார்.
ஏற்பாடுகளை பேராலய அதிபர் தந்தை மற்றும் பங்குத்தந்தை மோயிசன், உதவி பங்குத்தந்தை நிரோ ஸ்டாலின், ஆன்மிக தந்தை அந்தோனிராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.







