திருச்செந்தூர் கோவிலில் மூத்த குடிமக்கள் வரிசையில் அத்துமீறல்; பக்தர்கள் விழிப்புணர்வு பெறுவது எப்போது?


முருகப்பெருமானின் இரண்டாம்படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. கடற்கரை ஓரம் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். விழா நாட்களில் திருச்செந்தூருக்கு இந்த எண்ணிக்கை பல மடங்கு உயருகிறது. கோவிலுக்கு வரும் பகதர்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அதில் ஒரு திட்டம் மூத்த குடிமக்களுக்கான(சீனியர் சிட்டிசன்) தனி வரிசை என்பது வரவேற்கத்தக்க ஒரு முயற்சி. இந்த வரிசையை சரியான முறையில் கொண்டு சென்றால் வயதில் முதியவர்கள் இடையூறு இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யமுடியும்.

ஆனால் இது போல் தினமும் நடப்பது அரிதாக இருக்கிறது. அதிக கூட்டம் வரும் சமயங்களில் மூத்த குடிமக்கள் வரிசையில் அத்துமீறல் நடக்கிறது என்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இன்று (டிசம்பர் 25) திருச்செந்தூர் கோவிலில் கூட்டம் அலைமோதியது. பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
பொது தரிசனம், 100 ரூபாய் கட்டணம் தரிசனம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான வரிசை என தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது, இது பற்றிய அறிவிப்பு பலகையும் ஒவ்வொரு இடத்திலும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மூத்த குடிமக்களுக்கான வரிசையில் செல்பவர்கள் அதிக பட்சம் ஒரு மணி நேரத்துக்குள் சுவாமி தரிசனம் செயுது விட்டு திரும்பிவிடலாம். ஆனால் இன்று காலை வேளையில் இந்த வரிசையில் ஏற்பட்ட அத்துமீறல் காரணமாக சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம் வரை ஆனது.

இந்த வரிசையில் 60 வயதுக்கு மேற்பட்டவருடன் துணைக்கு ஒருவர் செல்லலாம். அப்படி செல்லுகையில் இருவரும் ஆதார் அட்டை வைத்து இருக்க வேண்டும். என்பது கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பு.
ஆனால் இந்த வரிசையில் இன்று காலையில் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் சென்றனர். வரிசையில் மூத்த குடிமக்கள் எண்ணிக்கையை விட வயது குறைந்தவர்கள் அதிகம் இருந்தனர். இதனால் வயதானவர்கள் ,மிகவும் சிரமப்பட்டனர். ஆதார் அட்டை பரிசோதனை எதுவும் நடக்கவில்லை.
இந்த வரிசை கண்காணிப்பில் இருந்த கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் ஆதார் பரிசோதனை எதுவும் செய்யாமல் வரிசையில் நின்ற அனைவரையும் மூத்த குடிமக்கள் வரிசையில் அனுமதித்து விட்டனர்,

வெகுநேரம் கழித்து மூத்த குடிமக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கிடுக்கிப்பிடி போட்டனர். ஆரம்பத்திலேயே இந்த முயற்சி எடுத்து இருந்தால் இந்த அத்துமீறல் நடந்து இருக்காதே..? என்று பகதர்கள் கேட்டனர்,
அதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், “ ஒவ்வொருவர் காதிலும் சொல்லவா முடியும். இதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்று எதிர் கேள்வி கேட்டார்.
பகல் 1.15 ,மணி வரை இந்த அத்து மீறலுக்கு அனுமதி அளித்து விட்டு பின்னர் சிறிது நேரம் அந்த வரிசையை அடைத்து விட்டனர்,. சிறிது நேரம் கழித்து வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்,
சாதரணமாக இந்த வரிசையில் செல்லும் பக்தர்கள் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்து விடமுடியும். ஆனால் இன்றைய அத்துமீறல் காரணமாக சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம் வரை ஆனது
மூத்த குடிமக்கள் சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்ய அத்துமீறல் தடை செய்யப்பட வேண்டும். சரியான முறையில் ஆதார் அட்டை பரிசோதனை செய்யப்பட வேண்டும்..

வயது குறைந்த பக்தர்கள் மத்தியில் சுய விழிப்புணர்வு ஏற்பட்டு இந்த வரிசையை பயன்படுத்துவதை அவர்களாகவே தவிர்க்க வேண்டும். அப்படியானால் தான் இந்த மூத்த குடிமக்களுக்கான திட்டம் பயனளிக்கும்….!
இன்று 100 ரூபாய் கட்டண வரிசையில் சென்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 7 மணி நேரமும், பொது தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் தரிசனத்துக்கு 8 மணி நேரமும் ஆனது..
வெகு நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம், திருப்பதி எழுமலையான் கோவிலில் இருப்பது போல் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
தொகுப்பு:-SKTS.திருப்பதி ராஜன்.







