கோவில்பட்டி: பள்ளி வேன் மீது கார் மோதி ஒருவர் பலி; 5 பேர் காயம்
கோவில்பட்டி அருகே சாத்தூர் சாலையில் அமைந்துள்ள M.M வித்யாசரம் பள்ளிக்கூட வேன் மாணவ மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக நாலாட்டின் புத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்து. வேனை கருப்பசாமி என்பவர் ஒட்டி வந்தார். உதவியாளர் அய்யம்மாள் மற்றும் 10ம்வகுப்பு மற்றும் 2ம்வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் இருந்தனர்.

பள்ளி வேன் கோவில்பட்டியை கடந்து நேஷனல் கல்லூரி அருகே கொண்டிருந்தபோது நெல்லையில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் திடீரென சாலையை தாண்டி அதி வேகமாக வந்து பள்ளிக்கூட வேன் மீது மோதியது. இதில் வேனின் முகப்பு மற்றும் காரின் முகப்பு பகுதிகள் பலத்த சேதமடைந்தன..

சம்பவ இடத்தில் காரில் வந்த வள்ளியூரை சேர்ந்த சேக் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த அகஸ்டின், பள்ளி வேன் டிரைவர் கருப்பசாமி, உதவியாளர் அய்யம்மாள் மற்றும் 10வகுப்பு மற்றும் 2ம்வகுப்பு படிக்கும் மாணவிகள் ஆகிய 5 பேரும் காயம் அடைந்தனர்.
பள்ளி வேன் டிரைவர் கருப்பசாமி மற்றும் வேன் டிரைவர் அகஸ்டின் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வேன் மற்றும் காரில் சிக்கி இருந்த டிரைவர்கள் இருவரையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். காயம் அடைந்த 5 பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ஷேக் உடல், பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.







