கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் 4 நண்பர்கள் கைது; திடுக்கிடும் தகவல்கள்
தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் சூர்யா.(வயது 22) இவர் பேக்கரியில் மாஸ்டராகவும், சில நேரம் மீன்பிடித் தொழிலுக்கும் சென்று வந்தார்.. கடந்த 13ஆம் தேதி மாலை இவரது நண்பர்கள் 4 பேர் இரண்டு பைக்குகளில் வந்து சூர்யாவை அழைத்துச் சென்றனர். அதன் பிறகு சூர்யா வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், தூத்துக்குடி – ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளபட்டி அருகே காட்டுப்பகுதியில் சூர்யா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றிய தகவல் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தாளமுத்து நகர் கணபதிபுரத்தைச் சேர்ந்த உத்திரகண்ணன்(வயது 22) சமீர் நகரைச் சேர்ந்த மகேந்திரன் செல்வம்(24), மேல் அழகாபுரியைச் சேர்ந்த கிங் இசக்கி முத்து, மாயா மாரிமுத்து ஆகிய 4 பேர் சூர்யாவை முன் விரோதம் காரணமாக கொலை செய்தது தெரிய வந்தது.

கடந்த 13ஆம் தேதியன்று உத்திரகண்ணன், தனது கூட்டாளிகளான மகேந்திரன் செல்வம், கிங் இசக்கி முத்து, மாயா மாரிமுத்து ஆகியோருடன் சூர்யாவைச் சந்தித்து, அவரிடம் சமாதானம் பேசுவதைப் போல பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி- ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளபட்டி காட்டுப்பகுதியில், அந்தோணியார் கோயிலுக்கு தென்புறம் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும், திட்டமிட்டப்படி பேரும் சூர்யாவைச் சுற்றி வளைத்து தாக்கி, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து உயிர் தப்பிக்க, சூர்யா வெள்ளபட்டி கிராமத்தை நோக்கி ஓடியுள்ளார். ஆனாலும், ஓட ஓட விரட்டிச் சென்று சூர்யாவைக் கத்தியால் குத்திவிட்டு 4 பேரும் பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில், ரத்த வெள்ளத்தில் சூர்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, உத்திரகண்ணன், மகேந்திரன் செல்வம், கிங் இசக்கி முத்து, மாயா மாரிமுத்து ஆகிய 4பேரையும் போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.







