குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம்; பக்தர்கள் காப்பு அணிந்தனர்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது,
பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விரதமிருக்கும் பக்தர்கள் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்து கொண்டனர்,

காப்பு அணியும் பக்தர்கள், கோவிலில் இருந்து காப்புகளை மொத்தமாக வாங்கி சென்று தங்களது ஊர்களில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கும் வழங்குவார்கள். காப்பு அணிந்த பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, 10-ம் நாளில் கோவிலில் செலுத்துவார்கள்.தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழா நாட்களில் தினமும் இரவு 10 மணியளவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
10-ம் திருநாளான வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 11-ம் திருநாளான 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் அம்மன் தேர் பவனி கோவிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். 12-ம் திருநாளான 4-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
குலசை தசரா விழாவை முன்னிட்டு போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்,







