சாலையோர கடைக்குள் புகுந்த அரசு பஸ்; 40 பயணிகள் காயமின்றி தப்பினர்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்தது.பஸ்சை ஓட்டப்பிடாரம் இந்திரா நகரை சேர்ந்த சொரிமுத்து (வயது 48) என்பவர் ஓட்டினார்.
பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். நேற்று அதிகாலை எட்டயபுரம் அருகே உள்ள எம்.கோட்டூர் விலக்கு அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. டிரைவர் சொரிமுத்து எவ்வளவோ முயற்சி செய்தும் தறிகெட்டு ஓடிய பஸ் இடதுபுறம் சாலையோரத்தில் இருந்த இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடைக்குள் புகுந்தது.

இதனால் அந்த கடையின் தகர மேற்கூரையானது பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே குத்தியது. இதில் அந்த பஸ்சின் ஒரு பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த டிரைவர் சொரிமுத்து படுகாயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக 40 பயணிகளும் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். இந்த விபத்தில் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த அரசு விரைவு பஸ் டிரைவர் சொரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







