அகில இந்திய ஆக்கி: மும்பையை வீழ்த்திய கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் அணி

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில், இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
நேற்றைய மாலை நேர போட்டிகள்
போட்டியின் மூன்றாம் நாளான நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற 10வது லீக் போட்டியில் சென்னை இன்கம் டேக்ஸ் ஹாக்கி அணியும் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதின.

இப்போட்டியில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வீரர்கள் 37வது நிமிடத்தில் பிரகாஷ் திர்கே (பெனால்டி கார்னர்) மற்றும் 51வது நிமிடத்தில் சதிஷ் கொங்காடி (பீல்டு கோல்) ஆகியோர் இரு கோல்களை அடித்தனர். எதிர் அணி வீரர்கள் கோல் எதவும் போடாத சூழ்நிலையில் 2:0 என்ற கோல் கணக்கில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வெற்றி பெற்றது.
பாலாஜி குமார் மற்றும் பிரவீன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வீரர் பிரகாஷ் திர்கே-வுக்கு வழங்கப்பட்டது.

\மாலை 6. மணியளவில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் சென்னை அக்கவுண்டெண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணியும் கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதின.
இப்போட்டியில் சென்னை அக்கவுண்டெண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணி வீரர் திரிசூல் கணபதி 22வது (பெனால்டி ஸ்டோக்) மற்றும் 27வது (பெனால்டி கார்னர்) நிமிடங்களில் இரு கோல்கள் அடித்தார். மேலும், 41வது நிமிடத்தில் சூர்யா (பீல்டு கோல்) ஒரு கோல் அடித்து மொத்தம் 3 கோல்கள் அடித்தனர்.

எதிர் அணியினர் எவ்வளவு முயற்சித்தும் ஒரு கோல் கூட போடமுடியவில்லை. இறுதியில் இதில் 3:0 என்ற கோல் கணக்கில் சென்னை அக்கவுண்டெண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணி வெற்றி பெற்றது.
அஜித் குமார் மற்றும் ராஜீவ் ரத்தன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது சென்னை அக்கவுண்டெண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணி வீரர் சூர்யா-வுக்கு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி அணிக்கு 2 வது வெற்றி
இரவு 8 மணியளவில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் மும்பை யூனியன் வங்கி அணியும் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணியும் மோதின.
பரபரப்பான போட்டியில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணி வீரர் மணிசங்கர் 10வது நிமிடத்தில் (பீல்டு கோல்) மற்றும் அரவிந்த் 48வது நிமிடத்தில் (பீல்டு கோல்)ஒரு கோல் வீதம் அடித்தனர்.
இதற்கு பதிலுக்கு பதில் கோல் அடிக்க வேண்டும் என்பதற்காக மும்பை அணியினர் கடுமையாக போராடினார்கள். இறுதிவரை அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2:0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணி வெற்றி பெற்றது.

சுரேஷ் குமார் மற்றும் அஸ்லாம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணி வீரர் மனோஜ் குமார்-க்கு வழங்கப்பட்டது.
