• May 14, 2025

இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு

 இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு

காஷ்மீரில் முக்கிய சுற்றுலா பகுதியான பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இரு வாரம் அமைதியாக இருந்த இந்தியா இதற்கு தக்க பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

நாடு முழுவதுமுள்ள 244 முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அச்சுறுத்தியது. அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து அந்நாடு தாக்குதலையும் நடத்தியது.

இந்நிலையில், இந்தியாவில் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டு உள்ளது என பாதுகாப்பு துறை அறிவித்து உள்ளது. இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலம் மீது பாகிஸ்தான் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. காஷ்மீரின் பாரமுல்லா, உரி, பூஞ்ச் பகுதிகளில் கனரக பீரங்கிகளை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.

காஷ்மீரின் குப்வாரா, பூஞ்ச், ரஜோரி, மெந்தார் உள்ளிட்ட நகரங்கள் மீதும் தாக்குதலை நடத்தியது. இந்நிலையில், இதற்கு இந்திய ஆயுதப்படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. எல்லையில் இருந்து ஏறக்குறைய 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாகூரில் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதில், லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு பிரிவான எச்.கியூ.-9 தாக்கி அழிக்கப்பட்டது. பீரங்கி கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பாகிஸ்தானின் முயற்சியையும் இந்தியா முறியடித்து உள்ளது. இதேபோன்று டிரோன்களை கொண்டு தாக்க முயன்ற அந்நாட்டு முயற்சியையும் இந்திய ராணுவம் முறியடித்து உள்ளது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ரேடார்கள் தகர்க்கப்பட்டன. வான் தடுப்பு பிரிவையும் இந்தியா தாக்கி அழித்தது. காலையில் இருந்து இந்தியாவின் இந்த பதிலடி தொடர்ந்து வருகிறது.

இதில், ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், சண்டிகார் உள்ளிட்ட 15 நகரங்களை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப்பின் ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், சண்டிகார் ஆகிய நகரங்களிலும், காஷ்மீரின் ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட் உள்ளிட்ட நகரங்களிலும் தாக்குதலை பாகிஸ்தான் தீவிரப்படுத்திய நிலையில், அதனை இந்தியா முறியடித்து உள்ளது.

இந்தியா மீது இதுவரை பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இதுவரை 3 பெண்கள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். எனினும், ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து வருகிறது என மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *