தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலரும் பிரபல நடிகையுமான கஸ்தூரி பங்கேற்று பேசினார். அப்போது தெலுங்கு மக்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
கஸ்தூரி மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின் அப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் கஸ்தூரி மதுரை ஐகோர்ட் கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு நேற்று முன்தினம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கல்வியாளர் சமூக ஆர்வலர் என கூறி கொள்பவர் இது போன்று பொறுப்பற்ற முறையில் பேசலாமா என்று நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கஸ்தூரியின் முன் ஜாமீன் மனு இன்று மீண்டும் முதல் வழக்காக விசாரணைக்கு வந்த நிலையில் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தலைமறைவாக உள்ள கஸ்தூரியை தனிப்படை போலீசார் தேடிவரும் நிலையில் நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.