• November 15, 2024

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்

 தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாஹூ கடந்த 2018-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட போது இவருக்கு, தமிழக கால்நடை துறை செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையை அர்ச்சனா பட்நாயக் பெறுகிறார்.

தற்போது அர்ச்சனா பட்நாயக் தமிழக அரசின் சிறு, குறு தொழில்துறை செயலாளராக உள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம், வரும் 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை முன்னின்று நடத்தும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சனா பட்நாயக், கடந்த 2002-ம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தார். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றி உள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *