டிமான்ட்டி காலனி 2′ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியீடு
அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் வம்சம், மவுனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, கழுவேத்தி மூர்க்கன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த 2015-ம் ஆண்டு அருள்நிதி, டிமான்ட்டி காலனி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி ‘ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.
அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி தவிர பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. ஒருசில கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎப்எக்ஸ் என ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படம் மூன்றாம் பாகத்திற்கான குறிப்போடு முடிவடைகிறது. படத்தின் மூன்றாம் பாகம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். இந்தநிலையில் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.