அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை நீதிமன்றங்களில் சமரச மையங்கள் ; வழக்குகளுக்கு தீர்வு காண பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில், சமரசம் மையங்கள் அக்டோபர் 1 ம் தேதி முதல் டிசம்பர் 31 ந் தேதி வரை செயல்படுகின்றன.
இந்த மையங்களில் குடும்ப பிரச்சனை வழக்கு, வாகன விபத்து இழப்பீடு, குடும்ப வன்முறை, காசோலை மோசடி, வர்த்தக பிரச்சனை, வங்கி கடன், பாகப்பிரிவினை வழக்கு மற்றும் இதர உரிமையியல் வழக்குகள், வாடகை தகராறு, நில ஆர்ஜிதம், தொழிலாளர் வழக்கு மற்றும் சமரசமாக முடிக்கக்கூடிய குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நேரடியாகவோ அல்லது வக்கீல் மூலமாகவோ சமரச மையத்திற்கு அனுப்ப கூறலாம்.
பயிற்சி பெற்ற சமரசர்கள் முன்னிலையில் வழக்கின் தரப்பினர்கள் தாங்களோ அல்லது தங்களது வக்கீல் உடனோ முன்னிலையாகி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம். வழக்குகள் சமரச மையத்தில் சுமூகமான தீர்வு காணப்பட்டால் நீதிமன்ற கட்டணத்தையும் திரும்ப பெறலாம். சமரசம் ஏற்படவில்லை என்றால் வழக்கை தொடர்ந்து நீதிமன்றத்திலேயே நடத்தலாம்.
தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு மற்றும் தமிழ்நாடு சமரச தீர்வு மையம் வழிகாட்டுதலில், தூத்துக்குடி மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நீதிமன்றம் முன்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் இந்த சமரச தீர்வு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை வக்கீல்களும், வழக்காடிகளும் தங்களது வழக்குகளில் விரைவான தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

கோவில்பட்டி சார்பு நீதிமன்றம் முன்பு தொடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் நிகழ்ச்சிக்கு சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமை தாங்கி , பொதுமக்களுக்கு சமரச மையம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பொதுமக்கள், வாகன டிரைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிபதிகள் ஆனந்த்(நீதித்துறை எண் 1), மணிமேகலா (நீதித்துறை எண் 2), அரசு வக்கீல் சங்கர்கணேஷ், சமரச தீர்வு மையத்திற்காக பயிற்சி பெற்ற வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







