வீடு புகுந்து ரூ.3 லட்சம் திருடியவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் சூர்யா திருமண மண்டபம் மற்றும் வாடகை வீடுகள் உள்ளன. இந்த கட்டிடத்தின் உரிமையாளரான ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் விஜயமுத்துப்பாண்டியன் மறைவுக்குப் பின், அவரது மனைவி சிவகாமி இத் திருமண மண்டபம் மற்றும் வாடகை வீடுகளைப் பராமரித்து வருகிறார்.
நேற்று மாலையில் திருமண மண்டபத்திற்கான வாடகைத் தொகை ரூ.3,40,000-ஐ ஒருவரிடம் இருந்து பெற்றுக்கொண்ட சிவகாமி, அத்தொகையை தனது வீட்டில் உள்ள அலமாரியில் பூட்டி வைத்துள்ளார்.

பின்னர், வீட்டின் சாவியை யாருக்கும் தெரியாத இடத்தில் மறைத்து வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, அலமாரியின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே வைத்திருந்த பணத்தை சரிபார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தில் ரூ. 3 லட்சம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. மீதம் ரூ.40,000 அலமாரியிலேயே இருந்துள்ளது.
இது குறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கயத்தாறு வடக்குத் தெருவை சேர்ந்த கனகராஜ் மகன் சிவக்குமார் (26) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.







