• October 27, 2026

கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 4 பேர் கைது

 கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கி ராஜா (20) என்ற கல்லூரி மாணவரை  நேற்று (25.10.2026) இரவு மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கினர்.

 இதில் படுகாயமடைந்த இசக்கிராஜாவை அப்பகுதி மக்கள் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார்  சம்பவ இடத்திற்குச் சென்று, விசாரணை மேற்கொண்டனர், மேலும் மருத்துவமனையில்  உயிரிழந்த இசக்கிராஜாவின் உடலைப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார்  நடத்திய விசாரணையில், உயிரிழந்த இசக்கிராஜா குடும்பத்தினருக்கும், அவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்லையா குடும்பத்தினருக்கும் இடையே கழிவுநீர் செல்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது.

இந்நிலையில், மீண்டும் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியபோது, செல்லையாவின் உறவினர்களான ஆழ்வார்கற்குளம் பகுதியைச் சேர்ந்த நெல்லையப்பன் மகன் ஆனந்த் (எ) ஆறுமுகம் (21), பெருமாள் (எ) துரை மகன் ராஜா சங்கர் (33), சுப்பையா மகன் சுரேஷ் (45) உள்ளிட்டோர் இசக்கி ராஜாவை அரிவாளால் தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ஆனந்த் (எ) ஆறுமுகம், ராஜா சங்கர், சுரேஷ் ஆகிய மூவரையும் ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர் . மேலும்  ஒரு இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *