தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை சம்பவங்கள் 9.2% குறைவு; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ததில், இச்சம்பவங்கள் தனிப்பட்ட, குடும்ப மற்றும் சிவில் பிரச்சினைகள் காரணமாக நிகழ்ந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவங்கள் குறுகிய கால இடைவெளியில் நடைபெற்றிருந்தாலும், ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. உள்ளூர் அளவிலான பிரச்சினைகள் மற்றும் திடீர் ஆத்திரம் காரணமாக இவை நிகழ்ந்துள்ளன.
ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் நடைபெற்ற கொலைகள் முறையே கழிவுநீர் வடிகால் மற்றும் பாதை தொடர்பான பிரச்சினைகளில் உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறுகளால் நிகழ்ந்துள்ளன.

நாசரேத் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், உயிரிழந்தவரின் மூத்த சகோதரரே குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய எல்லையில் நடைபெற்ற கொலை, மீன்பிடிக்கச் செல்வதற்கு முன்பு நெருங்கிய நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட சிறிய தகராறைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.
தட்டார்மடம் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிமுகமானவர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட சிறார்கள் மீட்கப்பட்டதுடன், குற்றம் சாட்டப்பட்டவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
மேற்கண்ட சம்பவங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் திடீர் ஆத்திரத்தின் நிகழ்ந்துள்ளன. அனைத்து வழக்குகளிலும் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 26.10.2025 வரை பதிவான 65 கொலை வழக்குகளுடன் ஒப்பிடுகையில், 26.10.2026 வரை 59 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் கொலை வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சுமார் 9.2% குறைந்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் மாவட்ட காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணி, கிராம அளவிலான நேரடிச் சந்திப்புகள் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கூறி உள்ளார்.







