தூத்துக்குடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு -போராட்டம்
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கான ஆலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீராலும், கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களாலும் கடற்கரையையொட்டி பாரம்பரியமாக செய்யப்படும் ‘கரைவலை’ மீன்பிடித் தொழில் முற்றிலும் அழியும்
அபாயம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதனால் கடல்வளம் மற்றும் மீன்வளம் கடுமையாக பாதிக்கப்படும் என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக கடலில் பலத்த காற்று வீசியதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்நிலையில், இன்று (சனிக்கிழமை ) காற்று குறைந்தததை தொடர்ந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் சென்றனர். அப்போது, தங்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் இத்திட்டத்திற்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களது மீன்பிடிப் படகுகளுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகப் பகுதியை முற்றுகையிட்டு கடலின் நடுவே திரண்டு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
பாரம்பரிய கரைவலை மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நன்னீராக்கும் திட்டப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், தங்களுக்கு தகுந்த வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் போராட்ட குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.







