நவராத்திரி விழா நாளை தொடக்கம்; கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் தினமும் லட்சார்ச்சனை
Oplus_16908288
தெய்வீகப் பெண்தன்மையை கொண்டாடும் நவராத்திரி திருவிழா நாளை அக்டோபர் 11 முதல் 19 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
நவராத்திரி என்றால் 9 இரவுகள் என்று பொருள். அமாவாசையை அடுத்து வரும் 9 நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது. சந்திர சுழற்சியின் முதல் 9 நாட்கள் பெண் தன்மையாக கருதப்படுகிறது.
தெய்வீகத்தின் பெண் தன்மையாகக் கருதப்படும் தேவிக்கு, இது மிகச் சிறப்பான நேரம். 9 வது நாள் நவமி என்று வழங்கப்படுகிறது. பவுர்ணமியை ஒட்டிய ஒன்றரை நாட்கள் சமநிலையான காலம். மீதமுள்ள 18 நாட்கள் இயற்கையிலேயே ஆண் தன்மையானதாக இருக்கிறது. மாதத்தின் பெண்மை மிளிரும் காலம் தேவியைப் பற்றியதாக இருக்கிறது. எனவேதான் இந்த கலாச்சாரத்தில், நவமி வரையிலான அனைத்து வழிபாடுகளும் தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பத்தாவது நாளான விஜயதசமி, வாழ்க்கையின் இந்த மூன்று அம்சங்கள் மீதும் வெற்றியடைவதை குறிக்கிறது.
ஒரு வருடத்தில், பன்னிரண்டு முறை இந்த ஒன்பது நாள் காலகட்டம் இருக்கிறது.
இதில் ஒவ்வொன்றும் தெய்வீகப் பெண்தன்மையின் அல்லது தேவியின் வெவ்வேறு அம்சங்களைக் குறித்ததாக அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபரை ஒட்டி, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது, ஏனென்றால் இது கற்றலின் தெய்வமான சாரதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மனிதனால் பல செயல்களை செய்யமுடியும் என்றாலும், இந்த கலாச்சாரத்தில் கற்றலுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
நவராத்திரி திருவிழா, வீடுகள் மட்டுமின்றி கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது அந்த வகையில் கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநரத சுவாமி கோவிலில்
நவராத்திரி திருவிழா மற்றும் லட்சார்ச்சனை விழா நாளை 11 ந் தொடங்கி 20-ந் தேதி வரை நடக்கிறது.
தினமும் மூலஸ்தான அம்பாளுக்கு காலை 8 முதல் 11:30 மணி வரை லட்சார்ச்சனையும் தொடர்ந்து
தீபாராதனை நடைபெறும்.
இதே போல் மாலை 6 முதல் 8 மணி வரை லட்சார்ச்சனையும் தொடர்ந்து
தீபாராதனை நடைபெறும்.
இரவு 7:30 மணிக்கு மேல் மூலஸ்தான அம்பாளுக்கு
புஷ்பாஞ்சலி நடைபெறும்.

நவராத்திரி விழா நாட்களில் தினசரி (உற்சவர் கொலு அம்பாளுக்கு)
காலை 10 மணி
இரவு 8 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து தீபாராதனை நடக்கும்.







