கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாலம் அழகு பெறுமா?
கோவில்பட்டி நகரின் இதயம் போன்ற பகுதியாக இளையரசனேந்தல் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக சென்னை, திருநெல்வேலி செல்லக்கூடிய பைபாஸ் சாலை, கூடுதல் பஸ் நிலையம், ராஜபாளையம் செல்லலாம்.
இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன, கோவில்பட்டி நகரில் இருந்து இந்த சாலைக்குள் நுழையும் இடத்தில் ரெயில்வே சுரங்க பாலம் உள்ளது, தொடக்கத்தில் மேம்பாலம் அமைய இருந்தது. வியாபாரிகள் மற்றும் சில அமைப்புகளின் எதிர்ப்புகள் காரணமாக மேம்பாலம் என்பது சுரங்கபாலமாக மாறியது.
ஆக்கிரமிப்புகள் காரணமாக இந்த பாலத்தின் இருபுறமும் இன்னும் சர்வீஸ் சாலை முழுமை அடையவில்லை. இதனால் இந்த பகுதியில் வசிப்பவர்கள் பெரும் சிரமங்களை நாள் தோறும் சந்திக்கிறார்கள்.. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் சாலையில் சாக்கடை தண்ணீரினால் அரிப்பு ஏற்பட்டு நிரந்தர பள்ளம் உருவாகி தினமும் விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது,.

இந்த பகுதியில் அதிகமாக பாதிக்கப்படுவது இருசக்கர வாகன ஓட்டிகள் தான், பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இருந்து சாக்கடை ஊற்று அடிக்கடி வெளியேறி சுகாதார கேடுகளை விளைவிக்கிறது.
பாலத்தின் கீழ்புறம் இரண்டு பகுதியிலும் படிக்கட்டுகள் அமைத்து பாதசாரிகள் செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த படிக்கட்டுகளில் சாக்கடை நீர் ஒடும்வதை காணமுடியும். மேலும் மின்விளக்கு வசதி கிடையாது. இரவு நேரத்தில் இந்த பகுதியில் செல்வது `திகில்’ ஏற்படுத்தும்.
இதற்கு எல்லாம் மேலாக மழைக்காலத்தில் பாலத்தின் அடிப்பகுதியில் மழைநீர் தேங்கி விடும். கூடவே சாக்கடை நீரும் கலந்து ஓடும். மேலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிக மழை பெய்து விட்டால் சுரங்க பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படும். மழைநீர் வடிந்த பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கும்.
தற்போது இந்த பாலத்தை மக்கள் சாக்கடை பாலம் என்றே அழைக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நினைத்தால் இந்த பாலத்தை அழகுபடுத்தி தனி அடையாளமாக மாற்ற முடியும்,
“பாலத்தை அழகுபடுத்துதல்” மட்டும் அல்லாமல், “பாலத்தின் தற்போதைய பரிதாப நிலையை முதலில் சரிசெய்து, பின்னர் அழகுபடுத்துதல்” என்ற அணுகுமுறை சிறப்பாக இருக்கும்.

பாலத்தை அழகுபடுத்த சில யோசனைகள் :-
*சுரங்க பாலத்தை முழுமையாக சுத்தப்படுத்துதல்
*சுவர்களில் உள்ள குப்பை, போஸ்டர், விளம்பரங்களை அகற்றுதல்.
*சுவர் மற்றும் தரைப்பகுதியை முதலில் சுத்தப்படுத்துதல்.
*சாக்கடை பள்ளத்தை சரி செய்தல்.
*கோவில்பட்டி வரலாறு, பாரம்பரியம், முக்கிய இடங்கள் போன்றவற்றை சுவர் ஓவியமாக வரையலாம்.
*கடலை மிட்டாய், பருத்தி, விவசாயம் போன்ற உள்ளூர் அடையாளங்களையும் கலைநயத்துடன் பயன்படுத்தலாம்.
*வண்ணமயமான சுவர் ஓவியம்
*ஒரே நிறத்தில் பெயிண்ட் செய்வதைவிட, இருபுறச் சுவர்களிலும் ஒரே கருத்தைக் கொண்ட தொடர் ஓவியம் அமைக்கலாம்.
*இரவு நேரத்தில் அழகாகத் தெரிய LED விளக்குகளையும் பொருத்தலாம்.
*பாலத்தின் முக்கிய பகுதியில் பெரிய எழுத்துகளில் “கோவில்பட்டிக்கு நகருக்குள் வரவேற்கிறோம்” என்று அமைக்கலாம்.
,*நகரத்தின் பொது அடையாளத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
பாலத்தின் அணுகுமுறை பகுதிகளில் தொட்டித் தாவரங்கள் அல்லது குறைந்த பராமரிப்பு தேவைப்படும் செடிகளை அமைக்கலாம்.
*பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கான பாதுகாப்பு
*சாலையோர தடுப்புகளில் பிரதிபலிக்கும் (reflective) பெயிண்ட்.

*போதுமான மின்விளக்குகள். நிறுவ வேண்டும்,
*பாதசாரிகளுக்கான படிக்கட்டு பாதையை சீரமைத்து விளக்குகள் நிறுவ வேண்டும்,
இப்படி எல்லாம் செய்தால் இந்த பாலம் “கோவில்பட்டியின் அழகான நுழைவாயில்” போல மாறும்.
அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நினைத்தால் மாற்றம் கொண்டு வரமுடியும்.. மாற்றம் வருமா? பொறுத்திருந்து பார்க்கலாம்…!
(SKTS. திருப்பதிராஜன் )







