மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு 28-ம் தேதி தண்ணீர் திறக்க திட்டம்
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். நீர் இருப்பை பொறுத்து குறித்த நேரத்திலோ அல்லது கால தாமதமாகவோ அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.

இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் உட்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் சுமார் 70 நாட்கள் ஆகிய நிலையிலும் அணையில் இருந்து குறுவை சாகுபடி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
நேற்று அணையின் நீர்மட்டம் 88.43 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 807 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. வழக்கமாக ஜூன் 12-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படாதபட்சத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும்போது தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டி விடும் என தெரிகிறது.
நேற்று காலை சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், விரைவில் நல்ல பதில் வரும் என்று கூறி இருந்தார். இதற்கிடையே நேற்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் மேட்டூர் அணைக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய் 28-ந் தேதி (நாளை மறுநாள்) மேட்டூர் அணையை திறக்க இருப்பதாக நேற்று மாலை தகவல் வெளியாகி உள்ளது. அவர், விமானம் மூலம் சேலம் கமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் மேட்டூர் செல்கிறார். அப்போது டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.







