குடிபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை கைது
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே, ஆதனூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (50). இவரது மகன் கருப்பசாமி.(21) இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

, நேற்றிரவு வழக்கம் போல மதுபோதையில் வீட்டிற்கு வந்த கருப்பசாமி, தந்தை மாரிமுத்துவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
மகனின் தொடர் தொல்லை மற்றும் தகராறால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கருப்பசாமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி, ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார், உயிரிழந்த கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கருப்பசாமி தந்தை மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







