தூத்துக்குடியில் திமுகவினர் வசூல் வேட்டை : அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் கலந்துகொண்டு பேசுகையில் கூறியதாவது:-
தூத்துக்குடியில் திமுக, அதிமுக என எந்தக் கட்சி வந்தாலும் மக்களுக்குத் தொந்தரவுதான். திமுக ஆட்சியில் இருந்தபோது கீதா ஜீவனும், அனிதா ராதாகிருஷ்ணனும் பங்குகளைப் பிரித்துக் கொண்டு மக்களிடம் கொள்ளையடிக்கும் வேலையைப் பார்த்தனர். குவாரிகளை ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்துக் கொண்டனர்.

தற்போது தவெக ஆட்சியில் தூத்துக்குடியில் இரண்டு அமைச்சர்கள் உள்ள நிலையில், சத்தமில்லாமல் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நிர்வாகிகள் அனைவரும் மக்கள் நலத் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்திப் பணியாற்றுகிறார்கள். முதல்வர் விஜய் மக்கள் விரும்பக்கூடிய தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார்.
தூத்துக்குடியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. அனைத்து நிறுவனங்களிலும் திமுகவினர் குறிப்பிட்ட தொகையை இப்போதும் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். காற்றாலை நிறுவனங்கள் மற்றும் கான்ட்ராக்ட் நிறுவனங்கள் எதிலும் கீதா ஜீவனுக்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.
தூத்துக்குடியைச் சுற்றி 70-க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை சட்டவிரோதமானவை. கல் குவாரிகளிலும் தொடர்ந்து கொள்ளையடித்து வருகின்றனர். அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான லாரிகளில் தினசரி நடைபெற்ற கனிம வளக் கொள்ளையை முதல்வர் விஜய் அதிரடியாகத் தடுத்து நிறுத்தியுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாகத் தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன் மக்களுக்கு என்ன செய்தார்? தான் ஒரு சாதாரண வியாபாரி எனக் கூறும் அவருக்கு இத்தனை குவாரிகளும், கோடிக்கணக்கான சொத்துக்களும் எப்படி வந்தன? அனிதா ராதாகிருஷ்ணனும், கீதா ஜீவனும் தொடர்ந்து ரவுடிசம் செய்து வருகிறார்கள்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி திருச்செந்தூரில் நடைபயணம் மேற்கொண்டபோது, அவரால் நடக்க முடியாத சூழலில் பெரியசாமி அவரைத் தூக்கிச் சென்றார் என்பதற்காக இவர்கள் ‘முரட்டு பக்தர்கள்’ எனக் கூறிக் கொண்டு, மொத்த மாவட்டத்தையுமே அவர்களிடம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டனர். அண்ணன், தங்கை என இருவரும் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதையும் கொள்ளையடித்துள்ளனர். இனிமேல் இந்த நிலைமை அனைத்தும் முற்றிலும் மாறும்.
இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் பேசினார்.







