திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுத்துப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பைத் தூத்துக்குடி நீதிமன்றம் ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கோவில்பட்டியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி. மார்க்கண்டேயன், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜய் படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 14 நாட்களில் நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் மார்க்கண்டேயன் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, தன்னைச் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இம்மனு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், “விசாரணைக்கு அழைப்பதற்கான முறையான நோட்டீஸ் அனுப்பாமல் கைது செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால், நீதிமன்றக் காவலில் வைக்கப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஜாமீன் வழங்க வேண்டும். மனுதாரர் இருமுறை தலைவராகவும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். எதிர்க்கட்சி என்ற முறையிலேயே விமர்சனம் செய்தார்; பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எதுவும் பேசவில்லை” என வாதிட்டார்.
காவல்துறை சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், “சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. கைது செய்வதற்கான காரணங்களில் திருப்தி அடைந்த பிறகே காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். கைதுக்கு முன்பாக இருமுறை தகவல் தெரிவிக்கப்பட்டு அது வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். உயர்நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுபாதேவி, மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை (ஜூலை 30) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.







