மார்கண்டேயன் எம்.எல்.ஏ.கைது விஷயத்தில் போலீசார் நேர்மையாக செயல்பட வேண்டும்; மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் தவெக ஆட்சியில், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் திமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் இந்த ‘டேக் டைவர்ஷன் மாடல்’ (Take Diversion Model) தவெக அரசு திட்டமிட்டுக் குறிவைத்து வேட்டையாடி வருகிறது,.

கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தனது வழக்கறிஞரையோ அல்லது ஆதரவாளர்களையோ நேரில் சந்தித்துப் பேச போலீசார் அனுமதிக்கவில்லை. அவருக்குத் தேவையான அவசர மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் கைது செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியின் அடிப்படைச் சட்ட உரிமைகளும், மனித உரிமைகளும் இந்த ஆட்சியில் முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா அல்லது சாத்தானின் ஆட்சியா எனக் கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், பொது மைதானத்தில் மாத்திரை அரைத்த ஆளுங்கட்சி அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினருக்கு நேர்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரிலும் நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்து எதிர்க்கட்சியினரைக் கைது செய்வது ஏன்?

ஆட்சியாளர்களின் சட்டத்திற்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல் துறையினரின் பணி அல்ல போலீசார் அனைவரும் சட்டப்படியும் தங்களது மனசாட்சிப்படியும் நேர்மையாகச் செயல்பட வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் அதற்கான கடுமையான விளைவுகளை எதிர்கால சட்டம் மற்றும் ஆட்சி மாற்றத்தின் போது சந்திக்க நேரிடும்
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.







