மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது: தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தை திமுகவினர் முற்றுகை
முதல் அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் காலை 8 மணி முதல் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன், எம்.எல்.ஏ.க்கள் திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன்,கோவில்பட்டி கருணாநிதி, பு மற்றும் தூர் மத்திய ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட திமுகவினர் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
உடனடியாகத் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுகிர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் திமுகவினர் தொடர்ந்து கோஷமிட்டதால் எஸ்பி அலுவலக வளாகத்தில் பரபரப்பு நீடித்தது.
கைது விவகாரத்தைத் தொடர்ந்து விளாத்திகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை ஆகிய இடங்களிலிருந்து நூற்றுக்கணக்கான திமுகவினர் வேன், கார்களில் தூத்துக்குடி நோக்கிப் புறப்பட்டனர்.
இதையறிந்த போலீசார், திமுகவினரை நகருக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக எட்டையாபுரம் அருகே அவசரமாக சோதனைச் சாவடி அமைத்துத் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பினர். இதனால் ஆங்காங்கே திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விசாரணை காரணமாகக் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதன்மை நுழைவாயில், எஸ்பி அலுவலக வாயில்கள் அனைத்தும் இரும்புத் தடுப்புகளால் முழுமையாக மூடப்பட்டன.
இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று எஸ்பியிடம் மனு கொடுக்க வெகுதொலைவிலிருந்து வந்த பொதுமக்களையும் போலீசார் உள்ளே விடாமல் திருப்பி அனுப்பினர். இன்று மனு வாங்கும் முகாம் கிடையாது, புதன்கிழமை வருமாறு கூறி திருப்பி அனுப்பப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதற்கிடையே எஸ்பி அலுவலகத்திற்குள் திமுகவினர் யாரையும் போலீசார் அனுமதிக்காத நிலையில், முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், எம்எல்ஏக்கள் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், கருணாநிதி உட்பட முக்கிய 5 பேர் மட்டும் மார்க்கண்டேயனைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்,.
போலீசாரின் கடுமையான சோதனைக்குப் பின்னர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்குள் அவர்கள் சென்று மார்க்கண்டேயன் எம்எல்ஏவை நேரில் சந்தித்துப் பேசினர்.







