திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மது அருந்திய 4 பேர் மீது வழக்கு பதிவு
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவதுடன், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை புரிகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, பக்தர்களின பாதுகாப்பு மற்றும் கோவில் வளாகத்தின் புனிதத் தன்மையை பேணும் பொருட்டு, கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் காவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தொடர்ச்சியான ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடப்பு ஆண்டில் இதுவரை கோவில் வளாகத்தில் மது அருந்தி, பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்திய 6 நபர்கள் மீது TNP Act பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த நபர்கள் மீது BNSS சட்டத்தின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (19.7.2026) மட்டும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அதிரடி சோதனையில், கோவில் வளாகத்தில் மது அருந்திக்கொண்டிருந்த 4 நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், பிரிவு 4(1)(A)-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல், சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த 5 நபர்கள் மீது பிரிவு 170(1)-ன் BNSS கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் கோவில் வளாகம், கடற்கரை பகுதி மற்றும் அதை ஒட்டிய இடங்களில் கூடுதல் காவல்துறையினர் நியமிக்கப்பட்டு, தொடர்ச்சியான ரோந்து, கண்காணிப்பு மற்றும் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
பக்தர்களின் பாதுகாப்பிற்கும், கோவில் வளாகத்தின் புனிதத் தன்மையை பாதுகாப்பதற்கும், சமூகவிரோத மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







