கோவில்பட்டி கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேச்சு: கைதான மார்கண்டேயன் எம்.எல்.ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Oplus_16908288
கோவில்பட்டியில் கிருஷ்ணன்கோவில் திடலில் சனிக்கிழமை இரவு தி .மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கருணாநிதி எம். எல். ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசும்போது, “மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் உன்னை (விஜய்) சட்டமன்றத்துக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறோம். எங்களை என்ன கோமாளி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்… சட்டமன்றத்தை பூட்டுவோம் என நீ கூறுகிறாய்… சட்டமன்றத்தை பூட்டினால் உன் எலும்புகள் இருக்காது; எலும்பை உடைத்துதான் அனுப்பி விடுவோம் என்று முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசினார்.
முதல்-அமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், சட்டமன்றத்திற்கு வாருங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மிரட்டும் தொனியிலும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்ண்டேயன் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. திமுக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து போலீஸ் ஜீப்பில் ஏற்றினர்,.

மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் போலீஸ் வாகனத்தை மறித்து சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.







