இணைய பாதுகாப்பு,போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் “இணைய பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியின் செயலர் பி.மகேந்திரன், முதல்வர், அ.பாண்டிராணி, இயக்குநர் பா.மகேஷ்குமார் ஆகியோர் வழிகாட்டுதலின் படி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கல்லூரி முதல்வர் முனைவர் அ.பாண்டியராணி தலைமை தாங்கினார். சுயநிதி பாடப்பிரிவின் இயக்குநர் பா.மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் எப்.சஹாய ஜோஸ் கலந்துகொண்டு இணையவழி மோசடிகள், போலி இணைப்புகள் மற்றும் வங்கி விவரங்களை பகிர்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
சமூகவலை தளங்கள் பாதுகாப்பாக பயன்படுத்துதல், வலுவான கடவுச்சொற்களை அமைத்தல் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக உடனடியாக காவல் துறையை அணுக வேண்டிய அவசியத்தையும் விளக்கினார்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் குரு வெங்கட்ராஜ் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல், மனநலம் மற்றும் சமூக பாதிப்புகளை எடுத்துரைத்து போதைப் பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார்.
மாணவர்கள் தங்களது நண்பர்களிடமும் போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் துணை காவல் ஆய்வாளர் முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இணைய வழி குற்றத்தடுப்பு பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் 800 மேற்பட்ட முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், வணிகவியல் தொழில் நெறிகணக்கியல் துறை தலைவர் கு.மாரியப்பன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மு.மாரிச்சாமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.







