கோவில்பட்டியில் காமராஜர் முழு உருவ வெண்கல சிலை; நடிகர் லெஜெண்ட் சரவணன் திறந்து வைத்தார்






கோவில்பட்டி மெயின் ரோட்டில் அடைக்கலம் காத்தான் மண்டபத்தின் மேல் பகுதியில் நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் சிலை 23-11-1991 அன்று நிறுவப்பட்டது.
ஒரு சிறுவன், சிறுமியை கரம் பிடித்து அழைத்து செல்வது போல் அமைந்த காமராஜர் சிலை நிறுவி பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது புதுப்பொலிவுடன் முழு உருவ காமராஜர் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா காமராஜர் பிறந்த தினமான இன்று ஜூலை 15 நடைபெற்றது. இதையொட்டி கோவில்பட்டி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. மாலை 4 மணியிலிருந்து சிலை அருகில் பொதுமக்கள் கூட தொடங்கினர். நாட்டுப்புற கலைஞர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாலை 6:50 மணி அளவில் நடிகர் லெஜெண்ட் சரவணன் விழா நடைபெற்ற இடத்துக்கு வந்தார். அங்கு கூடியிருந்தவர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். காரில் இருந்து இறங்கி அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் மேல் பகுதிக்குச் சென்ற நடிகர் சரவணன், பெருந்தலைவர் காமராஜர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
காமராஜர் சிலைக்கு அருகிலேயே திறந்தவெளி மேடை அமைக்கப்பட்டு இருந்தது.அங்கு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடக்கத்தில் மாணவி யுவஸ்ரீ வரவேற்பு நடனம் ஆடினார்.
விழாவுக்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறைசங்க தலைவர் ஆர். எஸ். ரமேஷ்.தலைமை தாங்கினார். அவர் நடிகர் சரவணனுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்
எஸ். எஸ். டி.எம்.கல்லூரி செயலாளர் கண்ணன் வரவேற்று பேசினார். நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க துணை தலைவர் செல்வராஜ் பொருளாளர் சுரேஷ்குமார் பத்ரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், காமராஜ் சிபிஎஸ்இ பள்ளி செயலாளர் செல்வகணேஷ், நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் ரத்தினராஜ் மற்றும் லெஜெண்ட் சரவணன் ரசிகர் மன்ற தலைவர் பொன்னுத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்

நடிகர் சரவணனை நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பிரபு அறிமுகம் செய்து வைத்து பேசினார். நடிகர் சரவணனுக்கு நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம் சால்வை அணி வித்தார்
பெருந்தலைவர் காமராஜர் பாடல் சி. டி. யை நடிகர் லெஜெண்ட் சரவணன் வெளியிட்டார். அதிக மதிப்பெண் பெற்ற பல்வேறு பள்ளிக்கூட மாணவ மாணவிகளுக்கும் நடிகர் சரவணன் நினைவு பரிசு வழங்கி பேசினார்.
அவர் பேசும்போது, பெருந்தலைவர் காமராஜர் லஞ்ச ஊழல் அற்ற ஆட்சியை தமிழகத்தில் நடத்தினார். ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அடையாளமாக திகழ்ந்த அவரைப் போல் ஒவ்வொருவரும் வாழ வேண்டும். காமராஜர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். தமிழ்நாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்தார். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் அவரது சிலையை திறந்து வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் “என்று குறிப்பிட்டார்
விழா முடிவில் நாடார் மெட்ரிக் பள்ளி செயலாளர் செல்வம் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் தொகுத்து வழங்கினார்.
விழா முடியும் தருவாயில் வந்த பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா, கூட்டத்தினர் மத்தியில் பேசினார்.







