மந்தித்தோப்பு சாலையை முழுமையாக சீரமைக்க கோரி மறியல்
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, மந்தித்தோப்பு வியாபாரிகள் சங்கம், மற்றும் குடியிருப்போர் சங்கங்கள் சார்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் போராட்டங்கள் நடத்தியும் எந்தவேலையும் நடைபெறவில்லை

நகராட்சி நிர்வாகம் திடீரென்று லாரி, ஜேசிபி வாகனங்களுடன் வந்து மேடு பள்ளங்களை மட்டும் நிரப்புவோம் என்று பணிகளை துவக்கினார்கள். இதனால் அதிருப்தி அடைந்த வியாபாரிகளும், பொதுமக்களும் முழுமையாக ரோடு போடவேண்டும், ‘பேட்ச் ஒர்க்’ செய்யவேண்டாம் என வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் க தமிழரசன் தலைமையில், மந்தித்தோப்பு ரோடு வியாபாரிகள் சங்க செயலாளர் சங்கரக்குமார் முன்னிலையில் மண் கொண்டு வந்த லாரியை சிறைப்பிடித்து மறியல் செய்தனர்.
சாலை மறியலில் பங்கேற்றவர்களிடம் கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் சுகந்தி, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவீந்தகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி “பேட்ச் ஒர்க்” வேலையை நிறுத்துவது, சாலையை முழுமையாக போட, மாவட்ட ஆட்சியருடன் பேசி முடிவு எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது,

பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதால் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெய்வவேந்திரன், முத்துராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் கருப்பசாமி உட்பட வியாபாரிகள் , குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.







