தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பு பிரசார இயக்கம்; காங்கிரஸ் செயற்குழுவில் முடிவு
Oplus_16908288
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் மக்கள் நலத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 முதல் ஒரு வாரத்திற்குத் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, “லஞ்சம் தவிர் – நெஞ்சம் நிமிர்” என்ற முழக்கத்துடன் ஊழல் ஒழிப்புப் பிரச்சார இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
உட்கட்சி அமைப்பைப் பலப்படுத்த எஸ்.எஸ்.ஏ.- 2 திட்டத்தின் கீழ் வட்டார, நகர, பேரூராட்சி கமிட்டிகளைச் சீரமைக்கப் பார்வையாளர்களை அனுப்பவும், ஐந்து வாக்குச்சாவடி குழுக்களுக்கு ஒரு மண்டலக் காங்கிரஸ் கமிட்டி அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவால் சுமார் ரூ.7 முதல் ரூ.7.5 கோடி வரை சட்டவிரோதமாகக் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல் விசாரணை விபரங்களைச் சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமர் கோயில் நிர்வாகத் தரவுகளைப் பொதுமக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் அறிந்துகொள்ள ஒன்றிய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும், இந்த கூட்டுக்கொள்ளை குறித்து உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஒன்றிய பாஜ அரசை இக்கூட்டம் கேட்டுக்கொண்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், கடந்த 12 ஆண்டுகளில் கலால் வரி மூலம் 25 லட்சம் கோடி ரூபாய் வசூலித்து மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ள பாஜ அரசு, தனியார் எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை லாபத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இறுதியாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாது வில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “தமிழகத்தின் அனுமதியின்றி மேகேதாது வில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்” என்று தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி கூறியதை வரவேற்ற செயற்குழு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கக் கர்நாடக அரசின் முயற்சிகளை எதிர்த்துத் தமிழ்நாடு காங்கிரஸ் தொடர்ந்து கடுமையாகப் போராடும் என்று தீர்மானத்தின் வாயிலாக உறுதியளித்தது.







