கோவில்பட்டியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கடம்பூர் ராஜு விமர்சனத்திற்கு எதிர்ப்பு: இருதரப்பினர் மோதல்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. 47 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஒருவர் ஆவார். தொடர்ந்து அதிமுகவினர் தவெக, திமுக என மாற்றுக் கட்சிகளுக்கு செல்வது அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. அதிமுகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் அவைத்தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பெருமாள் தலைமையில் நடந்த கூட்டத்தில், அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை கடுமையாக விமர்சித்து பலரும் பேசினர்.
இதற்கு அதிமுகவின் கலை இலக்கிய பிரிவு நிர்வாகி செல்வம் கட்சியை விட்டு போனவரைப் பற்றி பேச வேண்டாம், கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை கூற வேண்டும் என்று கூறினார். இதற்கு சில அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரின் சட்டையைப் பிடித்து இழுத்து வெளியே அனுப்ப முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மூத்த நிர்வாகிகள் அனைவரையையும் அமைதிப்படுத்தினர்.
அப்போது மாவட்ட மகளிர் அணியின் இணைச் செயலாளர் பிரியா என்பவர் விளாத்திகுளம் தொகுதியில் கட்சியினர் சரியாக வேலை பார்க்கவில்லை என்றும், மகளிர் அணிக்கு யாரும் மதிப்பு தரவில்லை என்றும் புகார் கூறினார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து இருதரப்பையும் சமாதானப்படுத்தியதுடன் மகளிர் அணி நிர்வாகி பிரியாவை போலீசார் பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்







