புதிய பட்டாசு ஆலைகள் தொடங்க அனுமதி மறுப்பு :தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக துவங்கப்படும் பட்டாசு ஆலைகளுக்கு கந்தக உரிமம் வழங்காமல் காலம் தாழ்த்தப்படுவதை கண்டித்தும், 50-க்கும் மேற்பட்ட புதிய பட்டாசு ஆலைகளுக்கு தடையில்லா சான்று வழங்காமல் முட்டுக்கட்டை போடுவதைக் கண்டித்தும் (ஜூன் 16-ம் தேதி) தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம் நடத்தப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் சங்கத் தலைவர் ரகுராம் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;

கடந்த 2 ஆண்டுகளாக கோவில்பட்டி, எட்டயபுரம் தாலுகாக்களில் புதிய பட்டாசு தொழிற்சாலைகள் துவங்குவதற்கான தடையில்லா சான்று, ஆலையை நடத்துவதற்கான அனுமதி, பட்டாசு தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருளான கந்தகம் பயன்படுத்துவற்கான உரிமம் ஆகியவை கோரி சுமார் 60-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளன.
இதில், சுமார் 10 தொழிற்சாலைகளுக்கு மட்டும் தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. தடையில்லா சான்று கிடைக்கப் பெற்றவர்கள் புதிய ஆலைக்கான கட்டிடங்களை கட்டிவிட்டனர். ஆனால், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பட்டாசு ஆலைகளை நடத்துவதற்கான அனுமதியும், கந்தக உரிம்மும் வழங்கப்படாததால் கடந்த 2 ஆண்டுகளாக தொழிற்சாலை கட்டிடங்களை மூடி வைத்துள்ளோம்.
50-க்கும் மேற்பட்ட புதிய பட்டாசு தொழிற்சாலைகளை துவங்குவதற்கான தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்து உற்பத்தியாளர்கள் 2 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். இதுகுறித்து பலமுறை அரசு உயர் அதிகாரிகளை சந்தித்துவிட்டோம். பலமுறை கோரிக்கை மனு கொடுத்துவிட்டோம். ஆனால், இதுவரை எந்தவித முறையான தகவலும் இல்லை. எங்களது கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. நாங்கள் அனைத்து விண்ணப்பங்களையும் சட்டப்படி முறையாக சமர்ப்பித்துள்ளோம். ஆனால், எங்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துகின்றனர்.
இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் முடங்கி உள்ளன. கடன் வாங்கி முதலீடு செய்துள்ளவர்கள், இந்த முதலீட்டுத் தொகைக்கு 2 ஆண்டுகளாக வட்டி செலுத்தி வருகிறோம். இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றனர். மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் புதிய பட்டாசு ஆலைகள் துவங்குவதற்கு உரிய முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சிலரின் தூண்டுதலின் காரணமாக புதிய பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அனுமதி மறுப்பதற்கான காரணத்தையும் அதிகாரிகள் முறையாக தெரிவிப்பதில்லை.
உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிடும் பட்டாசு உற்பத்தியாளர்களை அதிகாரிகள் முறையாக நடத்தாமல் மரியாதைக்குறைவாக நடத்துகின்றனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதற்கிடையே, தொழில் துறை அமைச்சரை சந்தித்தும் மனு வழங்கினோம். முதல்வருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவின் நகல் தூத்துக்குடி கலெக்டருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.
எனவே, புதிய பட்டாசு ஆலைகளை துவங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்தும், 2 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள விண்ணப்பங்களுக்கு உரிய முறையில் பதிலளிக்க வலியுறுத்தியும் ஜூன் 16-ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம் நடத்த உள்ளோம். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, சங்கத்தின் சட்ட ஆலோசகர் வக்கீல் பொன்னுச்சாமி, செயலாளர் மகேந்திர பிரபு, பொருளாளர் மாரிச்செல்வம், துணைத் தலைவர் விஜயக்குமார் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.







