கோவில்பட்டி சமூக நீதிப் பள்ளி விடுதியில் தங்கி படிக்க பிளஸ் -2 மாணவிக்கு அனுமதி மறுப்பு: தாயார் போராட்டம்
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் உள்ள சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியில் தங்கி, கடந்த கல்வியாண்டில் மாணவி ஒருவர் 11-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
நடப்பு கல்வியாண்டில் அவர் 12-ஆம் வகுப்பு படிப்பைத் தொடர வேண்டிய சூழலில், மீண்டும் அதே விடுதியில் தங்கிப் படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், விடுதி நிர்வாகம் தரப்பில் அந்த மாணவியைச் சேர்க்கக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. “மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று உரிய அனுமதி பெற்று, அவரிடம் கையெழுத்து வாங்கி வந்தால் மட்டும்தான் விடுதியில் மீண்டும் சேர்க்க முடியும்” எனக் கூறி விடுதி காப்பாளர் மற்றும் ஊழியர்கள் மாணவியைச் சேர்க்க மறுத்து திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.
ஏழைப் பின்னணியைக் கொண்ட அந்த மாணவியின் குடும்பத்தினரால் உடனடியாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அனுமதி வாங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் நீடித்தன. மேலும், விடுதி அனுமதி காலம் முடிவடைவதோடு, பள்ளிகள் திறந்து வகுப்புகள் தொடங்கிவிட்ட சூழலில், விடுதியி ல் இடம் கிடைக்காததால் மாணவியால் பள்ளிக்குச் செல்ல முடியாமலும், தனது மேல்நிலைப் படிப்பைத் தொடர முடியாமலும் தவிக்கும் நிலை உருவானது.

விடுதி நிர்வாகத்தின் இந்த அதிரடி மற்றும் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தங்களது மகளின் கல்வி உரிமைக்கு நியாயம் கோரியும், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இன்று கோவில்பட்டி சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியின் நுழைவாயில் முன்பாக திடீரென அமர்ந்து கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.







